பூமிக்கு அப்பாலுள்ள உயிர் தேடல்: உயிரின் சாத்தியத்துக்கான புதிய ஆதாரம் கண்டுபிடிப்பு

பூமியிலிருந்து சுமார் 700 டிரில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள K2–18b எனும் கோளில் உயிரின் சாத்தியத்தை வலியுறுத்தும் புதிய ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவின் நாசா நிறுவனம் இயக்கும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பூமியிலுள்ள உயிரினங்கள் மட்டுமே உருவாக்கக்கூடிய முக்கிய மூலக்கூறுகள் இந்த கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

K2–18b பூமியை விட இரண்டரை மடங்கு பெரியதாகும். இந்த கிரகம் ஹைசியன் உலகமாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. அதாவது, இது திரவ நீர் கொண்ட கடலால் மூடப்பட்டிருக்கும், ஹைட்ரஜன் நிறைந்த வளிமண்டலத்தைக் கொண்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2022ஆம் ஆண்டில் செயலில் சேர்ந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, K2–18b இன் வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் கார்பன் டைஒக்சைட் ஆகியவை இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இது, எக்ஸோப்ளானெட்டுகளில் கார்பன் அடிப்படையிலான மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்ட முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்த கண்டுபிடிப்பு உயிரின் சாத்தியத்தை ஆராய எங்களை மேலும் ஊக்குவிக்கிறது. ஆனால் உறுதி செய்ய எதிர்காலத்தில் கூடுதல் ஆய்வுகள் தேவை" என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வானியல் நிறுவனத்தின் பேராசிரியர் நிக்கு மதுசூதன் கூறினார்.

Post a Comment

0 Comments