பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
லாகூரில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ஓட்டங்களை குவித்தது. அதிகபட்சமாக அறிமுக வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்கீ 150 ஓட்டங்களை பெற்று அவுட்டானார்.
இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றிலேயே அறிமுகமான முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில், 150 ஓட்டங்களை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை தென் ஆப்பிரிக்கா வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்கீ படைத்தார்.
இதற்கு முன்னதாக 1978 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெய்ன்ஸ் அடித்த 148 ஓட்டங்கள் தான் அறிமுக ஒருநாள் போட்டியில் ஒருவர் அடித்த அதிகபட்ச ஓட்டங்களாக இருந்து வந்தது. கிட்டத்தட்ட 47 ஆண்டுகால சாதனையை மேத்யூ ப்ரீட்ஸ்கீ முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 19 ஆவது வீரர் என்ற சாதனையையும் மேத்யூ ப்ரீட்ஸ்கீ முறியடித்துள்ளார்.
இதனையடுத்து நியூசிலாந்து 304 ஓட்டங்களை எடுத்து ஸ்கோரை சமநிலை செய்தபோது, கேன் வில்லியம்சன் 6,997 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
ஒரு ஒட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் கேன் வில்லியம்சன் பவுண்டரி விளாசினர். இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதோடு, கேன் வில்லியம்சன் 7 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார்.
167 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் 159 இன்னிங்சில் 7,000 ஓட்டங்களை கடந்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 7,000 ஓட்டங்களை கடந்த 2 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக விராட் கோலி 159 இன்னிங்சில் 7,000 ஓட்டங்களை கடந்திருந்தார். தற்போது விராட் கோலியை பின்னுக்கு தள்ளி வில்லியம்சன் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
150 இன்னிங்சில் 7,000 ஓட்டங்களை கடந்து ஹசிம் அம்லா முதல் இடத்தில் நீடிக்கிறார். ஏபி டி வில்லியர்ஸ் 166 இன்னிங்சில் கடந்து 4 ஆவது இடத்தில் உள்ளார்
0 Comments